மாட்டு வண்டி நான் சென்ற முதல் வாகனம் இதுதான். எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊர் திருவிழாவிற்கு முதன் முதலாக 4 மாத குழந்தையாக இருக்கும் போது சென்றேன் பின்னாளில் எனது அம்மா சொன்னதாக ஞாபகம். எனக்கு மட்டுமல்ல 25 ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் வாகனம் மாட்டு வண்டியாகத்தான் இருக்கும். இன்றும் மாட்டு வண்டிகள் அழியவில்லை ஆனால் குறைந்து இருக்கின்றது.
பழைய திரைப்படங்களில் மாட்டு வண்டியைப்பற்றிய பாடல்களும், மாட்டு வண்டிகளும் அதிகம் இடம் பெற்று இருக்கும் கிராமத்து படம் என்றால் மாட்டு வண்டிக்கு நிச்சயம் இடம் உண்டு. மாட்டு வண்டியைப்பற்றி புகழ் பெற்ற பாடல்கள் நிறைய இருக்கின்றன.
முன்காலத்தில் சரக்கு வாகனமாக மக்கள் பய்னபடுத்தியது மாட்டு வண்டியைத்தான் இவ்வண்டியைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பனின் தாத்தா கூறிய தகவல் இன்னும் நன்றாக இருந்தது. அவர் காலத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் அதிகம் நடக்குமாம் ஊர் ஊராக சென்று மாட்டு வண்டி ஓட்த்தில் நிறைய பரிசுகள் பெற்று இருக்கிறாாரம் மாட்டு வண்டி பந்தயத்திற்கு சென்ற இடத்தில் தான் பந்தயத்தை பார்க்க வந்த அவர் மனைவியையும் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். வண்டிக்கு பெயிண்ட் அடித்து அழகாக பராமரித்து வருகிறாராம் இப்ப பட்டணத்துக்கு குடி வந்தாதால் அதெல்லாம் நினைவுகளோடு சரி என்கிறார்.
மேலும் அவர் கூறும்போது அந்த காலத்தில் சுற்றுலா என்றால் இவர்களுக்கு பழனிதான் அதிகம் செல்வார்களாம் பழனி செல்லும்போது வீட்டில் உள்ள மாட்டு வண்டியின் மேல் சாக்கு கட்டி விட்டு அதுதான் நிழல் போகும் போது கட்டுச்சோறு செய்து கொண்டு செல்வார்களாம் வரும் போது விறகு பொறுக்கி சில இடங்களில் கல் வைத்து சாப்பாடு செய்து கொள்வார்களாம். பழனி சென்று வர ஐந்து நாட்கள் ஆகுமாம் இவர் திருப்பதிக்கும், ராமேஸ்வரத்துக்கும் மாட்டு வண்டியிலேயே குடும்பத்துடன் சென்று வந்துள்ளேன் என கூறும் போது ஆச்சர்யம் கலந்த இன்பம் அதிகரித்தது.
விஞ்ஞான வளர்ச்சியில் நாம் இன்று ஒரே நாளில் திருப்பதி, ராமேஸ்வரம் சென்று வந்தாலும் மாட்டு வண்டியில் செல்லும் சுகம் தனிதான். நண்பர்களே நீங்கள் உங்கள் கிராமத்திற்கு இன்றும் சென்றால் மாட்டு வண்டியில் உங்கள் குழந்தைகளுடன் கொஞ்ச தூரம் சென்று பாருங்கள் அந்த சுகம் ஒரு தனி சுகமே...